மட்டக்களப்புக்கு கிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம், நாளை ஞாயிற்றுக்கிழமை தாழமுக்கமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில், குறித்த காற்றழுத்தத் தொகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதன் தாக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை நிலவக்கூடும் என்பதுடன், பல மாகாணங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.










