2027ஆம் ஆண்டுக்கான லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் திரவப் பெற்றோலிய வாயு (LPG) விநியோக ஒப்பந்தத்தை OQ Trading Limited நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் 12 மாத காலத்திற்கு, 420,000 மெற்றிக் தொன் (±20%) திரவப் பெற்றோலிய வாயுவை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதில் குறைந்தபட்சம் 336,000 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஒரு மெற்றிக் தொன்னுக்கான சவூதி அராம்கோ ஒப்பந்த விலையுடன் 133.93 அமெரிக்க டொலர் நிலையான மேலதிகக் கட்டணத்தைச் சேர்த்து, காப்புறுதி மற்றும் சரக்குக் கட்டணங்கள் உள்ளடங்கிய (CIF) அடிப்படையில் இந்த விநியோக ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான எரிவாயு கொள்வனவிற்காக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் சர்வதேச போட்டி விலைமனுக் கோரலை முன்னெடுத்திருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் நான்கு நிறுவனங்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக் குழு, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்தது.
இதனையடுத்து, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதன்படி, எரிவாயு கொள்வனவு ஒப்பந்தம் OQ Trading Limited நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.









