அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பீஜிங்கை சென்றடைந்துள்ளார்.
ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் இருந்து இறங்கிய ஜனாதிபதி ட்ரம்பிற்கு, இசைக்குழுவினர் மற்றும் கொடிகளை ஏந்தியவர்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ட்ரம்புடன் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் சீனா சென்றுள்ளனர். இதில் டெஸ்லா (Tesla) தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மற்றும் என்விடியா (Nvidia) தலைவர் ஜென்சன் ஹுவாங் ஆகியோர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தையில் இறக்குமதி வரிகள், அரிய வகை தனிமங்கள் (Rare Earths), செயற்கை நுண்ணறிவு (AI), ஈரான் போர் மற்றும் தாய்வான் விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
அமெரிக்காவிலிருந்து விமானங்கள் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை சீனா அதிகளவில் கொள்வனவு செய்வது தொடர்பான அறிவிப்புகள் இந்தச் சந்திப்பின் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை வரவேற்பு நிகழ்வு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ட்ரம்ப் வரலாற்று சிறப்புமிக்க ‘Temple of Heaven’ பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார். வெள்ளிக்கிழமை மதிய உணவைத் தொடர்ந்து அவர் சீனாவிலிருந்து புறப்படுவார்.
இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஸ்திரப்படுத்தவும், பதற்றத்தைத் தணிக்கவும் இரு தலைவர்களும் ஆர்வமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க செனட்டர் ஸ்டீவ் டெய்ன்ஸ் இது குறித்துக் குறிப்பிடுகையில், “போயிங் விமானங்கள், மாட்டிறைச்சி மற்றும் பீன்ஸ் தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்களை இந்தச் சந்திப்பில் எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.