உகண்டாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற 81 வயதான யோவேரி முசெவேனி (Yoweri Museveni), நாட்டின் ஜனாதிபதியாக 7ஆவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
இதன் மூலம் ஆபிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்களில் ஒருவராக அவர் தனது பதவிக்காலத்தை நீடித்துள்ளார்.
தலைநகர் கம்பாலாவில் (Kampala) நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, கவச வாகனங்கள் உட்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொது அமைதியைப் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதவியேற்பு விழாவில் உரையாற்றிய முசெவேனி, தனது புதிய பதவிக்காலத்தை உகாண்டா மக்கள் அனைவரும் “விழிப்புடன் இருக்கும் காலம்” (No more sleep) எனக் கருத வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மக்கள் அதிக செல்வம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கடந்த 40 ஆண்டுகளில் அமைதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் அடைந்த முன்னேற்றத்தைத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முசெவேனியின் பதவிக்காலம் 2031 ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ளது.
1986 ஆம் ஆண்டு கிளர்ச்சிக் குழுவின் தலைவராக அதிகாரத்திற்கு வந்த இவர், அதன் பின்னர் ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 44 வயதான பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பொபி வைன் (Bobi Wine), இந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ளார்.
தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டிய போதிலும், தேர்தல் அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர்.
அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.