நாட்டின் வடகிழக்கு கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இலங்கையில் நிலவி வரும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தொகுதி அடுத்த 48 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு விலகிச் செல்லும் என்றும், படிப்படியாக வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.