இந்தோனேசியாவின் ஹல்மஹேரா (Halmahera) தீவில் உள்ள துகோனோ (Mount Dukono) எரிமலை இன்று வெள்ளிக்கிழமை வெடித்தது.
இதில் சிக்கிக்கொண்ட 20 மலையேற்ற வீரர்களில் 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மீட்பு முகமை தெரிவித்துள்ளது.
மீதமுள்ள மூன்று பேரைத் தேடும் பணி நாளை சனிக்கிழமை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பின் போது சுமார் 10 கி.மீ உயரத்திற்குச் சாம்பல் மேகங்கள் சிதறின.
எனினும், குடியிருப்புப் பகுதிகள் தொலைவில் இருப்பதால் கிராமங்களுக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதுமில்லை.
மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 9 சிங்கப்பூரர்கள் மற்றும் 11 இந்தோனேசியர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் எத்தனை பேர் சிங்கப்பூரர்கள் என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்த எரிமலை வெடிப்பில் இரண்டு சிங்கப்பூரர்கள் உட்பட மூவர் உயிரிழந்ததாகத் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மீட்பு முகமை இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
பலியானவர்களின் உடல்கள் இன்னும் மலைப்பகுதியிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.
துகோனோ எரிமலை தொடர்ந்து வெடிக்கக்கூடும் என தேசிய பேரிடர் தணிப்பு முகமை எச்சரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி இரவு நேரத் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை காலை தேடுதல் பணி மீண்டும் தொடங்கும்.
மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.