தாய்லாந்து அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, எட்டு மாத சிறைத் தண்டனையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக, போலியான காரணங்களைக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
76 வயதான தக்சின் ஷினவத்ரா இன்று திங்கட்கிழமை காலை 7:40 அளவில் பேங்கொக்கில் உள்ள குலோங் பிரேம் மத்திய சிறையிலிருந்து விடுதலையானார்.
அவரை அவரது மகள் பெதோங்தார்ன் ஷினவத்ரா மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
“நாங்கள் தாக்சினை நேசிக்கிறோம்” என ஆதரவாளர்கள் முழக்கமிட்டு அவரை வரவேற்றதுடன், அவர் தனது தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை நிறைவு செய்துள்ளதால், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியில் அவர் தனது காலில் மின்சாரக் கண்காணிப்பு வளையத்தை (electronic ankle monitor) அணிந்திருக்க வேண்டும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 ஆண்டுகள் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தக்சின் ஷினவத்ரா, கடந்த 2023 ஆம் ஆண்டு எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக தாய்லாந்து திரும்பினார்.
பின்னர் மன்னரால் அவரது தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட்ட போதிலும், அவர் சில மணித்தியாலங்கள் மட்டுமே சிறையில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்குள்ள அதிவிசேட பிரிவில் ஆறு மாதங்கள் சிகிச்சை பெற்றார்.
எனினும், தாக்சினும் அவரது மருத்துவர்களும் திட்டமிட்டே அவசியமற்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு மருத்துவமனை தங்குமிட காலத்தை நீடித்ததாக உச்ச நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது.
கடந்த 25 ஆண்டுகளாக தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்சின், அண்மைக் காலங்களில் தனது செல்வாக்கை ஓரளவிற்கு இழந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது ‘பியூ தாய்’ கட்சி பின்னடைவைச் சந்தித்தமையும், அவரது மகள் பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டமையும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இருப்பினும், “அவர் செய்த அனைத்தும் மக்களுக்காகவே” எனக் கூறும் அவரது தீவிர ஆதரவாளர்கள், தக்சினின் விடுதலை தாய்லாந்து அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என இன்றும் நம்புகின்றனர்.