எத்தியோப்பியாவின் ஹராரி (Harari) பிராந்தியத்தில், 12 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் (Quintuplets) பிறந்துள்ளன.
35 வயதான பெத்ரியா ஆடம் (Bedriya Adem) என்ற பெண்மணி, நான்கு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் ஈன்றுள்ளார்.
இயற்கை முறையில் (Natural conception) இத்தனை குழந்தைகள் உருவாவது 55 மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அரிய நிகழ்வாகும்.
குழந்தைகள் ஒவ்வொன்றும் 1.3 கிலோ முதல் 1.4 கிலோ வரை எடையுடன் பிறந்துள்ளன.
தற்போது தாயும் ஐந்து குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“கடந்த 12 ஆண்டுகளாக சமூகத்தின் ஏச்சுப் பேச்சுகளால் மிகுந்த மனவேதனையில் இருந்தேன். ஒரு குழந்தைக்காகப் பிரார்த்தனை செய்தேன், ஆனால் இறைவன் எனக்கு ஐந்தைக் கொடுத்துள்ளான்” என பெத்ரியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஹிவோட் ஃபாலா (Hiwot Fana) சிறப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இந்த பிரசவம் நடைபெற்றுள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசாங்கம் மற்றும் சமூகத்தின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த குழந்தைகளுக்கு நாயிஃப், அம்மார், முன்சிர், நசிரா மற்றும் அன்சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அவர்களது கிராமமே இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடி வருகிறது.