ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘எயார்பஸ்’ விமானக் கொள்வனவு விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான நிதி மோசடிகள் மற்றும் இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் வில்லி கமகே ஆகியோரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக இலஞ்சம் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் ஒரு அங்கமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரிடம் நேற்றைய தினம் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கைகள் அனைத்தும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழ் நீதிமன்றத்திடம் கையளிக்கப்படவுள்ளன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் காலமானார்.
இருப்பினும், அவரது மறைவு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தற்போதைய விசாரணைகளுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய கபில சந்திரசேனவின் மனைவி தற்போது வௌிநாட்டில் வசித்து வருவதால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டில் தலைமறைவாக உள்ள சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸ் விசேட பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.