QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2027இல் இடம்பெற்றுள்ள 12 இலங்கை பல்கலைக்கழகங்களில் எட்டு பல்கலைக்கழகங்கள் தமது தரநிலைகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பிராந்திய ரீதியிலான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னணி பல்கலைக்கழகங்கள் சில கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த தரநிலைகளைப் பெற்றுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகம் 46 இடங்கள் சரிந்து 364ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகம் 389ஆவது இடத்திலும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 398ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இலங்கையின் முதல்நிலைப் பல்கலைக்கழகம் என்ற இடத்தை கொழும்பு பல்கலைக்கழகம் தக்கவைத்துள்ளது. இந்த மூன்று பல்கலைக்கழகங்களும் ஆசியாவின் முதல் 400 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
இம்முறை தரவரிசையில் இடம்பெற்ற 12 இலங்கைப் பல்கலைக்கழகங்களில் எட்டு பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், இரண்டு பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஏனைய இரண்டு பல்கலைக்கழகங்களும் தமது முந்தைய இடங்களைத் தக்கவைத்துள்ளன.
மொரட்டுவை மற்றும் களனி பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம்
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மொரட்டுவைப் பல்கலைக்கழகம் அதிக முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. 37 இடங்கள் முன்னேறி 517ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
களனிப் பல்கலைக்கழகமும் முன்னேற்றம் கண்டு, முன்னர் 731–740 என்ற தரவரிசைப் பிரிவில் இருந்த நிலையில், இம்முறை 687ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் குறைந்தது 44 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆசியா முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டி அதிகரித்துள்ள சூழலில் இந்த முன்னேற்றங்கள் பதிவாகியுள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் மொத்தம் 1,722 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 195 பல்கலைக்கழகங்கள் முதன்முறையாக இந்தத் தரவரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.
எனினும், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் தரநிலை வீழ்ச்சிக்கு புதிதாக இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களே முக்கிய காரணம் அல்ல என QS நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மாறாக, ஏற்கனவே போட்டியில் இருந்த பிராந்திய பல்கலைக்கழகங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டமையே முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னணி பல்கலைக்கழகங்களின் தரநிலையைப் பாதித்த தொழில்வழங்குநர் மதிப்பீடு
QS ஆசியப் பல்கலைக்கழக தரவரிசை மதிப்பீட்டு முறையில் 20 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ள தொழில்வழங்குநர் மதிப்பீடு (Employer Reputation), கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் தரநிலையைப் பாதித்த முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
பட்டதாரிகளின் தரம் தொடர்பாக சர்வதேச தொழில்வழங்குநர்களிடம் நடத்தப்படும் ஆய்வின் அடிப்படையில் இந்தக் குறியீடு மதிப்பிடப்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்வழங்குநர் மதிப்பீட்டுப் புள்ளி 2.8 புள்ளிகளால் குறைந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டுப் புள்ளி 4.3 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், தொழில்வழங்குநர் மதிப்பீட்டில் ஆசியாவின் முதல் 200 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெற்றுள்ள ஒரே இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற இடத்தை கொழும்பு பல்கலைக்கழகம் தக்கவைத்துள்ளது. இந்தப் பிரிவில் அது 192ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
பட்டதாரிகளுக்கான அங்கீகாரத்தைப் பிராந்திய மற்றும் சர்வதேச தொழிலாளர் சந்தைகளில் அதிகரிப்பதுடன், தொழில்வழங்குநர்களுடனான தொடர்புகளையும் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
கல்விசார் பணியாளர் மற்றும் மாணவர் விகிதங்களும் தாக்கம்
மாணவர் எண்ணிக்கைக்கும் கல்விசார் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கலாநிதிப் பட்டம் பெற்ற கல்விசார் பணியாளர்களின் விகிதத்தை அளவிடும் குறியீடுகளும் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரநிலைகளைப் பாதித்துள்ளன.
கற்பித்தல் வளங்கள் மற்றும் நிறுவனங்களின் கல்விசார் திறனை மதிப்பிடுவதற்காக இந்தக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
QS தரவரிசையில் ஆசிரியர்–மாணவர் விகிதம் (Faculty/Student Ratio) 10 சதவீதப் பங்களிப்பையும், கலாநிதிப் பட்டம் பெற்ற பணியாளர்கள் (Staff with a PhD) தொடர்பான குறியீடு 5 சதவீதப் பங்களிப்பையும் கொண்டுள்ளன.
இந்த இரண்டு குறியீடுகளிலும் பிராந்தியப் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. எனினும், தரவரிசையில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பது ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் அடிப்படைக் கல்வி வளங்கள் அனைத்தும் மோசமடைந்துள்ளன என்பதைக் கட்டாயமாகக் குறிக்காது.
இலங்கையின் உயர்கல்வித் துறை அதிகரித்து வரும் போட்டி நிறைந்த சூழலை எதிர்கொள்வதை இந்தத் தரவரிசை முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. தமது தரநிலைகளைத் தக்கவைத்துக்கொள்ள பல்கலைக்கழகங்கள் தொழில்வழங்குநர்களுடனான தொடர்புகள், கல்விசார் பணியாளர் வளம், ஆராய்ச்சிச் செயல்திறன் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.










