வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையத்தைப் பாதுகாப்பது என்பது பழமையான கட்டடமொன்றைப் புனரமைப்பது மாத்திரமல்ல, நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் சுற்றுலாத்துறைக்கும் புதிய பெறுமதியைச் சேர்க்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் 78.34 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடி தபால் நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வைத் தொடர்ந்து, பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சிவப்பு செங்கற்களால் ஆங்கிலேயர்களின் டியூடர் (English Tudor) கட்டடக்கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தபால் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
குறித்த கட்டடத்தின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள், கட்டடத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படையினரின் தொழிலாளர் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலாத் தலங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் சுற்றுலா ஊக்குவிப்பு மையமாக இந்தக் கட்டடத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா பிராந்திய தபால் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் தபால் செயற்பாட்டுப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் புதிய இருமாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் திருத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் நுவரெலியா தபால் நிலையம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் 88 தபால் நிலையங்களில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், தபால் மா அதிபர் ருவன் சத்குமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.










