சர்வதேச பொலிஸ் சங்கத்தின் (IPA) 69ஆவது உலக மாநாட்டை இம்முறை இலங்கை நடத்துகிறது. ஆசிய நாடொன்றில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
மாநாட்டின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றதுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பொலிஸ் மா அதிபரும், சர்வதேச பொலிஸ் சங்கத்தின் இலங்கைப் பிரிவுத் தலைவருமான பிரியந்த வீரசூரியவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், 69 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சர்வதேச ஒத்துழைப்பையும் கலாசாரப் பரிமாற்றத்தையும் வலுப்படுத்துவதற்கான தளமாக இம்மாநாடு அமைகிறது.
நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எல்லை தாண்டிய குற்றங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகள் மற்றும் சட்ட அமுலாக்கத் துறையில் உருவாகிவரும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்ற அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கையின் இயற்கை அழகு, கலாசார மரபுரிமை மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை அனுபவிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.
சர்வதேச பொலிஸ் சங்கம் என்பது உலகளாவிய ரீதியில் 600,000க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட அரச சார்பற்ற அமைப்பாகும். பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளிடையே தொழில்சார், சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
“Servo per Amikeco” என்ற இலத்தீன் மொழி வாசகத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ள இவ்வமைப்பின் பொருள், “நட்பின் ஊடாக சேவை” என்பதாகும். இதன் தற்போதைய உலகத் தலைவராக மார்ட்டின் ஹொஃப்மான் செயற்படுகிறார்.
உலக மாநாட்டைத் தொடர்ந்து, ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை சர்வதேச பொலிஸ் சங்கத்தின் நட்புறவு வாரம் நடைபெறவுள்ளது.
இதன்போது, இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கலாசார சுற்றுலாத் தலங்கள், இயற்கை எழில்மிகு பிரதேசங்கள், உள்ளூர் உணவு வகைகள் மற்றும் பாரம்பரியங்களை சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் நாடளாவிய சுற்றுலாப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.










