வாரகாபொல பகுதியில் தனது செல்லப் பூனையைக் காப்பாற்ற முயன்ற 32 வயதுடைய பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், வாரகாபொல, அல்கம, மதுருபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி இரவு சுமார் 10 மணியளவில், வீட்டின் பின்புறத்திலிருந்து பூனைகள் கத்தும் சத்தத்தைக் கேட்ட பெண், அங்கு சென்று பார்த்தபோது பூனையொன்று கிணற்றுக்குள் விழுந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தனது தந்தையுடன் கிணற்றுக்குச் சென்ற அவர், கிணற்றுக்குள் சிக்கியிருந்த பூனையைக் கண்டறிவதற்காகத் தனது கையடக்கத் தொலைபேசியின் ஒளியைப் பயன்படுத்தியுள்ளார்.
இதன்போது, கயிற்றில் கட்டப்பட்ட வாளியைப் பயன்படுத்தி பூனையை மீட்பதற்குத் தந்தை தயாராகிக்கொண்டிருந்த நிலையில், பெண் கிணற்றுக்குள் ஒளியைப் பாய்ச்சுவதற்காகக் குனிந்துள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்ததுடன், விழுந்த வேகத்தில் கிணற்றின் கொங்கிறீட் பகுதியொன்றில் தலையை மோதியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உறவினர் ஒருவரின் உதவியுடன் அவர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு, நிட்டம்புவ, வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த பெண், நிட்டம்புவ, கலகெதிஹேன பகுதியில் அமைந்துள்ள கையுறை உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததுடன், தனது பெற்றோர் மற்றும் இளைய சகோதரருடன் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வாரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










