சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவி விலக வேண்டும் அல்லது ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடும் மழைக்கு மத்தியிலும் தொடரும் போராட்டத்தின்போது கருத்துத் தெரிவித்த அவர், ஒக்டோபர் 21ஆம் திகதி ஆயுதங்களுடன் இருவர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
“நேற்று ஆயுதங்களுடன் இருவர் இங்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டு, ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர்” என கஸ்ஸப தேரர் தெரிவித்தார்.
மேலும், இந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்காக வன்முறை மோதல்களை உருவாக்க அரசாங்கம் முயற்சித்தால் அது வெற்றியளிக்காது எனவும், பெலவத்தை அரசியல் தலைமையகத்தை நோக்கி அவர் எச்சரிக்கை விடுத்தார்.
“ஜனாதிபதிக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று பதவியிலிருந்து விலகுவது, மற்றையது ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவது” என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாகத் தெரிவித்த கஸ்ஸப தேரர், எதிர்வரும் நாட்களில் பெருந்தொகையான பௌத்த பிக்குகளை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாகவும் கூறினார்.
அதற்கு முன்னதாக, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
“அவ்வாறு இடம்பெறாவிட்டால், ஜனாதிபதி தனது பதவியை இழக்க நேரிடும்” எனவும் கஸ்ஸப தேரர் எச்சரித்தார்.
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம், கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியைத் தொடர்ந்து ஒக்டோபர் 15ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடைந்தது.
எனினும், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டக்காரர்கள் தங்கியிருப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 16ஆம் திகதி பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவிற்கு இடம்பெயர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் பிக்குகள், ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பான தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.
அவரை விடுவிப்பதற்காக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளின் பிரதான கோரிக்கையாகும்.










