சொத்து விபர அறிக்கைகளை தாமதமாக சமர்ப்பித்தமை தொடர்பில் சுமார் 34,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற பொது நிதிக்குழு (COPF) கூட்டத்தில், ஆணைக்குழுவின் நிதித் தேவைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது சம்பந்தப்பட்ட நிதியில் பணம் எதுவும் இல்லை எனவும், எதிர்காலத்தில் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது, பொருந்தக்கூடிய சந்தர்ப்பங்களில் அதிகளவு அபராதங்களை விதிக்குமாறு ஹர்ஷ டி சில்வா பரிந்துரைத்துள்ளார். அபராதங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆணைக்குழுவின் சில தேவைகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பித்தமை தொடர்பில் சுமார் 34,000 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெருமளவான நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆணைக்குழுவுக்குத் தேவையான வாகனங்களை கொள்வனவு செய்வதற்குக்கூட பயன்படுத்த முடியும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.










