மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் பாடசாலை கீதம் இசைத்தட்டு வடிவில் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீண்ட காலமாக எழுத்து வடிவில் மட்டும் இருந்த பாடசாலை கீதம், புதிய இசை வடிவில் பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த இசைத்தட்டு மில்லர் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில், சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“நீண்ட காலமாக எழுத்து வடிவில் இருந்த எமது பாடசாலை கீதத்தை புதிய இசை வடிவில் பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிடுவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பாடசாலை மீதான பற்றையும், ஒற்றுமை உணர்வையும் மேலும் அதிகரிக்க முடியும்” என அதிபர் தெரிவித்தார்.
மேலும் பாடசாலை கீதத்தை இயற்றியவர்களுக்கும், இசையமைத்து பாடிய கலைஞர்களுக்கும், இதற்கு அனுசரணை வழங்கிய மில்லர் விளையாட்டுக் கழகத்தினருக்கும் அதிபர் நன்றியை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் புதிய இசை வடிவிலான பாடசாலை கீதத்தை பாடி மகிழ்ந்தனர்.













