அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் காரணமாக வாடிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இணையவழி உடனடி கடன் சேவைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் தற்போது பல உடனடி கடன் சேவைகள் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும், கையடக்கத் தொலைபேசி செயலிகளின் ஊடாக பொதுமக்கள் இணையவழியில் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வழங்கப்படும் சில கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது அதிக வட்டி விகிதத்தில் தவணைகளை வசூலிப்பதன் மூலம் கடன் பெற்றவர்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் கடன்களைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிறுவனங்கள் வழங்கும் நிபந்தனைகளில் கடன் மீளச் செலுத்தப்பட வேண்டிய விதம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த செயலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களை கடன் பெறுபவரே ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சிலர் செயலிகளை நிறுவிய பின்னர், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முறையாக வாசித்துப் புரிந்துகொள்ளாமல் கடன்களைப் பெற்றுள்ளதாக விசாரணையாளர்கள் அவதானித்துள்ளனர்.
இதனால், இணையவழி தளங்கள் ஊடாக உடனடி கடன்களைப் பெறும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், கடன் பெறுவதற்கு முன் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் கவனமாக வாசித்து புரிந்துகொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, இணையவழி கடன் வசதியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கடனைத் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்தினால் விதிக்கப்படும் ஏனைய தேவைகள் தொடர்பில் தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடன் பெறுவதற்கு முன்னர் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாகப் புரிந்துகொள்வது, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் ஏற்படக்கூடிய நிதி இழப்புகள் மற்றும் ஏனைய சிரமங்களைத் தவிர்க்க உதவும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இணையவழி உடனடி கடனைப் பெறுவதற்கு முன்வரும் பொதுமக்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாக ஆராய்ந்து, அவற்றைப் புரிந்துகொண்ட பின்னரே எச்சரிக்கையுடன் முடிவெடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.










