முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாகன இறக்குமதி வரி மோசடி தொடர்பில் தான் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகளை மறுத்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான குற்றங்கள் மட்டுமே எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் தன்மை குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதாகவும், குறித்த வாகனத்தை இறக்குமதி செய்தமை, அதன் உரிமையாளராக இருந்தமை அல்லது இறக்குமதி வரியைச் செலுத்தத் தவறியமை தொடர்பில் தமக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்ச்சைக்குரிய வாகனத்தின் உரிமையாளர் தாம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மோட்டார் வாகனத்தைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பான சட்டக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதும், வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொள்வதும் முற்றிலும் வெவ்வேறான விடயங்களாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனத்தைத் தம்வசம் வைத்திருந்த நபருக்கு எதிராக கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் தனியான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தான் வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஊடக நிறுவனங்கள் தமது செய்திகளைத் திருத்தி, தான் ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டுகளின் சட்டரீதியான தன்மையைத் துல்லியமாக விளக்க வேண்டும் என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.










