நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான விசாரணையின்போது, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கேள்வி எழுப்பியுள்ளது.
கிரிஷ் (Krrish) பரிவர்த்தனை தொடர்பான விசாரணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு, இன்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் எழுப்பப்பட்டது.
நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, “இன்று ஒடுக்குபவர்களாகச் செயல்படுபவர்கள் நாளை பாதிக்கப்பட்டவர்களாக மாறக்கூடும்” என முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவையா, விசாரணை அதிகாரிகளையா அல்லது வழக்கின் சாட்சிகளையா குறிக்கிறது என ஆணைக்குழு சார்பில் ஆஜரான சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் தனுஜா பண்டார கேள்வி எழுப்பினார்.
வழக்கின் இரண்டு சாட்சிகள் தங்களுக்கும் தமது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, முன்னதாக வழங்கிய வாக்குமூலங்களில் உண்மைகளை மறைத்திருந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், நாமல் ராஜபக்ஷவும் மற்றொரு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அந்தச் சாட்சிகள் மேலதிக வாக்குமூலங்களை வழங்கியதாகவும், தற்போது உண்மைகளை வெளிப்படுத்தப் பாதுகாப்பாக உணர்வதாக அவர்கள் தெரிவித்ததாகவும் தனுஜா பண்டார குறிப்பிட்டார்.
அலி சப்ரி தெரிவித்த கருத்தின்படி, எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடியவர்கள் இந்தச் சாட்சிகள்தானா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அலி சப்ரி, தமது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இன்று ஜனாதிபதி நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படும் திகதிகளை அறிவிக்கிறார். மேலும், 50 பேர் அடங்கிய பட்டியல் குறித்தும் பேசுகிறார். எனவே, அந்தக் கருத்து உங்களுக்குப் பொருந்தினால், அதை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள்” என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் நீதித்துறையும் சுயாதீனமான நிறுவனங்கள் எனக் குறிப்பிட்ட அலி சப்ரி, சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்றும் தெரிவித்தார்.
அரசியல்ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்றும், அதேவேளை அவருக்கு விசேட சலுகைகளும் வழங்கப்படக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி எனக் கருதப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் 13(5) ஆவது உறுப்புரையையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், நாமல் ராஜபக்ஷவின் பெற்றோர் இருவரும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவரது தாயார் முந்தைய தினம் இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அலி சப்ரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விசேட சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
எனினும், முன்வைக்கப்பட்ட காரணங்கள் விசேட சூழ்நிலைகளாகக் கருதப்பட முடியாது எனத் தெரிவித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சாட்சிகள் மீதான சாத்தியமான தலையீடுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டி பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இருதரப்பினரதும் சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு தொடர்பான உத்தரவு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.










