சிறுநீரக மற்றும் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவித்தொகை வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்-

சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தினால் சிறுநீரக சத்திர சிகிச்சை, இருதய சத்திர சிகிச்சை செய்ய பணத்தேவை உடையவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும், இப்தார் வைபகமும் அமானா நற்பணி மன்றத் தலைவர் ஏ.எல். பரீட்  தலைமையில் அல்- அமானா நற்பணி மன்ற சாய்ந்தமருது காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிறுநீரக சத்திர சிகிச்சை, இருதய சத்திர சிகிச்சை செய்ய பணத்தேவை உடையவர்கள், பெருநாளை கொண்டாட வசதியற்ற ஏழைகள் மற்றும் அங்கவீனர்கள், அனாதைகள், விதவைகள், வாழ்வாதாரம் இழந்தோர் எனப்பலருக்கும் பெருந்தொகை பண உதவிகளை அல்- அமானா நற்பணி மன்றத்தினர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், உலமாக்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பிராந்திய சமூக சேவை அமைப்புக்களின் பிரமுகர்கள், சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்தார் விசேட மார்க்க உரையை சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரஷாதி) நிகழ்த்தினார்.