இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 08.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடி மின்னலுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் அதிகபட்சமாக 256.2 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
