கிளிநொச்சியில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில், விநாயகபுரம் பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவர், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 24 வயதான கணவனும் 20 வயதான மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகரவின் வழிகாட்டலில், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மனவின் ஆலோசனைக்கு அமைய, கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்கவின் தலைமையில், பொலிஸ் உத்தியோகத்தர் 79718 இலக்கமுடைய ஏக்கநாயக்கவின் தகவலின்படி, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டள்ளது.

கிளிநொச்சி-உதயநகர், அம்பாள் குளம், விநாயகபுரம், சாந்தபுரம், கனகாம்பிகைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 09 வீடுகளில், பகல் நேரத்தில் வீடுகளுக்குள் சென்று, இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்வாறு திருடப்பட்ட 10 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
