அதிகரித்துள்ள சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நாளை செவ்வாய்க்கிழமைக்குள் நாடளாவிய ரீதியில் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப எரிவாயு விநியோகத்தைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச நாளிதழான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய GOODWILL கப்பல் இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ கேஸ் லங்கா தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, ஒக்டோபர் 22ஆம் திகதி மற்றுமொரு எரிவாயுக் கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன், இன்று திங்கட்கிழமை மேலும் ஒரு கப்பல் வருகைதரவுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒக்டோபர் 22ஆம் திகதி கிடைத்த 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவைப் பயன்படுத்தி, ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் சந்தையில் போதுமான எரிவாயு இருப்பு காணப்படும் என உறுதியளித்துள்ள லிட்ரோ கேஸ் லங்கா, நுகர்வோர் தட்டுப்பாடின்றி உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.










