கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் (Ebola) பரவல் காரணமாக இதுவரை குறைந்தது 100 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 390க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தத் தொற்றை ‘சர்வதேச அவசரநிலை’ (International Emergency) எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.
தற்போதைய எபோலா பரவலானது ‘புந்திபுகியோ’ (Bundibugyo) என்ற வைரஸ் திரிபினால் ஏற்பட்டுள்ளது. இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ கண்டறியப்படவில்லை.
கொங்கோவில் பணியாற்றிய 6 அமெரிக்கர்கள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களில் ஒருவருக்கு அறிகுறிகள் தென்பட்டுள்ளதுடன், இவர்களை ஜெர்மனியிலுள்ள அமெரிக்க இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று தனிமைப்படுத்த (Quarantine) நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், கொங்கோவிற்கான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
கொங்கோவிற்கு வெளியே அண்டை நாடான உகண்டாவிலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.
இதனால் ருவாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் தங்களது எல்லைப் பகுதி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
ஆபிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜீன் கசேயா (Jean Kaseya) விடுத்துள்ள எச்சரிக்கையில், முறையான மருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, உயிரிழந்தவர்களின் உடல்களைக் கழுவி இறுதிச்சடங்குகளைச் செய்யும் போது தொற்று பரவும் அபாயம் அதிகமுள்ளதால், இறுதிச்சடங்கு வழிகாட்டல்களைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.