சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள், தங்களது விசா அல்லது குடிவரவு அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை விஞ்சியவாறு தங்குவது சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் என சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 15 அன்று உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப்பட்டால், கைது செய்யப்படுதல் மற்றும் சட்டத் தொடர்விற்கு (Prosecution) உட்படுத்தப்படுதல், அபராதம் மற்றும் தடுப்புக்காவலில் (Detention) வைக்கப்படுதல் மற்றும் நாடுகடத்தப்படுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருப்பவர்களுக்கு தங்குமிடம் வழங்குவது அல்லது அவர்களுக்கு புகலிடம் அளிப்பது ஆகியவையும் உள்ளூர் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என உயர்ஸ்தானிகராலயம் எச்சரித்துள்ளது.
இலங்கை நாட்டவர்கள் தங்களது விசா அல்லது அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை வழக்கமாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தகுதியுடையவர்கள், தங்களது விசா காலம் முடிவடைவதற்கு முன்னரே அதற்கான நீடிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தங்குமிடம் காலாவதியாவதற்கு முன்னர் சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
ஏற்கனவே விசா காலம் முடிந்து தங்கியிருக்கும் நபர்கள், உடனடியாக சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைக்குழுவை (ICA) தொடர்புகொள்ளுமாறு அல்லது தங்களது நிலையை முறைப்படுத்துவதற்கான தகுந்த வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயம் மேலும் வலியுறுத்தியுள்ளது.