நீண்டகால கடும் வெப்பத்திற்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் திடீரென கனமழை பெய்ததுடன், பலத்த காற்று, மின்னல் மற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், பலத்த காற்று காரணமாக சிறியளவிலான சேதங்களும் பதிவாகியுள்ளன.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மற்றும் மல்வத்தை உள்ளிட்ட கரையோர மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பல வீதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், சில குடியிருப்புப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், பிரதான வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டதுடன், கடல் கொந்தளிப்பால் மீனவர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.