இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினரும், முன்னாள் நட்சத்திர வீரருமான ரொஷான் மகாநாம, 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் தம்புள்ளை சிக்சர்ஸ் (Dambulla Sixers) அணியின் ஆலோசகராக (Team Mentor) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு எல்.பி.எல் பருவத்திலும் தம்புள்ளை அணியின் ஆலோசகராக செயற்பட்ட முன்னாள் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) போட்டி நடுவரான ரொஷான் மகாநாம, வரவிருக்கும் புதிய பருவத்திலும் அதே பதவியில் நீடிப்பார் என தம்புள்ளை சிக்சர்ஸ் அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நியமனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தம்புள்ளை சிக்சர்ஸ் நிர்வாகம், உலகக் கிண்ணத்தை வென்ற ஒரு வீரராகவும், மதிக்கத்தக்க கிரிக்கெட் நிர்வாகியாகவும், இலங்கையின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆளுமைகளில் ஒருவராகவும் விளங்கும் ரொஷான் மகாநாமவின் வருகை அணிக்கு பெரும் பலம் என விவரித்துள்ளது.
இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய போது அந்த அணியில் முக்கிய உறுப்பினராக இருந்த ரொஷான் மகாநாம, ஓய்வுக்குப் பின்னர் ஐ.சி.சி போட்டி நடுவர் உள்ளிட்ட பல நிர்வாக மற்றும் ஆளுமைப் பொறுப்புக்களை வகித்துள்ளார்.
அவரது பரந்த அனுபவம், தலைமைத்துவ பண்பு மற்றும் வழிகாட்டல்கள் வரவிருக்கும் எல்.பி.எல் தொடருக்காக தயாராகி வரும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணிக்கு தொடர்ந்து சிறந்த பங்களிப்பை வழங்கும் என அந்த அணி மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.