Rebuilding Sri Lanka நிதியம் என்று ஒரு நிதியம் இல்லை எனக் கூறி, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் விளக்கிய அமைச்சர், “Rebuilding Sri Lanka நிதியம்” என்பது திறைசேரியின் பிரதிச் செயலாளரின் (DST) கணக்கிற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பெயர் மாத்திரமே என்றும், இந்த கணக்கிற்கு கிடைக்கும் நிதிகள் அனைத்தும் அரசாங்கத்தின் திரட்டப்பட்ட நிதியத்தில் (Consolidated Fund) சேர்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதியத்தை உத்தியோகபூர்வமாக நிறுவுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான வரைவு தற்போது சட்ட வரைஞரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் இந்த நிதியத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதைத் தடுக்கும் நோக்கிலேயே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மக்களை தவறாக வழிநடத்தி, குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், இந்த நிதியத்திற்கு கிடைக்கும் எந்தவொரு பணமும் திறைசேரியின் பிரதிச் செயலாளரின் கணக்கிலேயே வைப்புச் செய்யப்படுவதால், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அதிலிருந்து ஒரு சதமேனும் பயன்படுத்த முடியாது என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், ‘டித்வா’ (Ditwah) பேரழிவிற்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாயில், இதுவரையில் முழுமையான தொகை பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.