கண்டி பிரதான ரயில் பாதையில் ‘டிட்வா’ (Cyclone Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 97 இடங்களில், 92 இடங்களின் புனரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ரயில் பாதையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் பிரதான பாதையில் சேதமடைந்திருந்த 97 பகுதிகளில் 92 பகுதிகளின் பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
இன்னும் 5 இடங்களில் மட்டுமே புனரமைப்புப் பணிகள் பாக்கியுள்ளன.
நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் தண்டவாளங்கள் முற்றாக உடைந்திருப்பதன் காரணமாக இந்த இடங்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 5 இடங்களின் பாதிப்பு தீவிரமாக இருப்பதால், ரயில்வே திணைக்களம் மட்டும் தனியாக இதனைச் சரிசெய்வது கடினம்.
எனவே, இதற்கான புனரமைப்பு ஒப்பந்தங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டையிலிருந்து கடுகண்ணாவ மற்றும் பேராதனை ஊடாக கண்டி வரையிலான ரயில் சேவைகளை, போக்குவரத்து அமைச்சினால் திட்டமிடப்பட்டவாறு இந்த ஆண்டிற்குள்ளேயே மீண்டும் ஆரம்பிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய மலைநாட்டுக்கான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, எஞ்சியுள்ள 5 இடங்களின் பணிகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.