2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் கடமை தவறியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோTrial-at-Bar நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அப்போதைய ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு புலனாய்வுத் தகவல்கள் தெரிந்திருந்தன என ஹேமசிறி பெர்னாண்டோ சாட்சியமளித்தார்.
அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கும் இந்தத் தகவல்கள் தெரிந்திருந்தன என்றும், அவர் அந்தத் தகவல்களை மறைக்க முற்பட்டார் என்றும் ஹேமசிறி குற்றம் சாட்டினார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஹேமசிறி பெர்னாண்டோ, இதற்கான பொறுப்பு வேறு தரப்பினருக்கே உரியது எனத் தெரிவித்தார்.
“பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தலைவராகவும் இருந்த ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினார். மிகவும் சிரேஷ்ட அதிகாரி என்ற ரீதியில் நான் இந்த வழக்கில் இழுத்து விடப்பட்டுள்ளேன்,” என அவர் கூறினார்.
அத்துடன் “நான் முன்வைத்த தகவல்கள் சரியாக ஆராயப்பட்டிருந்தால், என் மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்காது.
உண்மையான குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகவே உள்ளனர்” என்றும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்