இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்ற 9 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
முதலில் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பொலிஸ் உள்ளக மைதானம் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் உரை மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதான பொலிஸ் பரிசோதகர்களின் உரைகள் இடம்பெற்றன.
பின்னர் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு ஓய்வு பெற்றுச் சென்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் நினைவுப் பரிசில்களுடன் புகைப்படம் பொறிக்கப்பட்ட கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வுகள் யாவும் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆலோசனையில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.