நாட்டை சுற்றியுள்ள பல கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று மற்றும் சீற்றமான அலைகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை மாலை 4.30 மணி முதல் புதன்கிழமை (27) மாலை 4.30 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை இடர்கள் குறித்து முன்னெச்சரிக்கை செய்யும் மத்திய நிலையத்தின் தகவலின்படி, கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கன்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடல் பிராந்தியங்களிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என அந்த எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சுமார் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பக்கூடும் என்றும், அலைகளின் கால அளவு 10 முதல் 14 வினாடிகளாகக் காணப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரக் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் கரையை நோக்கி வரக்கூடும் (Surges) என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினரும், மீனவ சமூகத்தினரும் மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
