வரி விதிப்புக் கொள்கைகள் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமையினால் கிராமப்புறப் பெண்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில்,
இலங்கையில் நிலவும் நாணய வீழ்ச்சி, பல அடுக்கு வரிகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் கூட்டுத்தாக்கம் காரணமாக, இலங்கையில் பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளின் விலைகள் ஆசியாவிலேயே மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் இத்தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும் பல்வேறு இறக்குமதி வரிகள் என்பன இவற்றின் சில்லறை விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன.
இது கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் மீது பாரிய பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து செலவீனங்களின் உயர்வு, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கான வரிகள் மற்றும் உள்நாட்டு உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு போன்ற கூடுதல் பொருளாதாரக் காரணிகளும் இந்த விலை உயர்வுக்குப் பங்களித்துள்ளதாக அவர் மேலும் விளக்கியுள்ளார்.
இந்த விலை உயர்வு காரணமாக கிராமப்புறங்களில் “மாதவிடாய் சுகாதார பாதுகாப்பின்மை” ஏற்பட்டுள்ளதாக அவர் விபரித்துள்ளார்.
இதன் விளைவாக, கிராமப்புறப் பெண்களும் பாடசாலை மாணவிகளும் தங்களது மாதவிடாய் காலங்களில் வேலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது அவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதுடன், பரந்த சமூக மற்றும் பொருளாதார ரீதியான பின்னடைவுகளையும் தோற்றுவித்துள்ளது.
எனவே, இலங்கையில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள் கிடைப்பதன் அவசியத்தன்மை குறித்தும், அதனால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்தும் ஒரு விரிவான தேசிய அளவிலான கலந்துரையாடல் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.