இந்தியாவின் குஜராத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரின் கணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம், பாலன்பூரில் உள்ள கணேஷ்புராவைச் சேர்ந்தவர் நிகேஷ் என்பவர், கடந்த 19 ஆம் திகதி தனது மனைவியை காணவில்லை என்று பாலன்பூர் மேற்கு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சிசிடிவி கமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி சிக்னல் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண்ணை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டனர்.
இதையடுத்து அந்த பெண்ணை விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.
பெண்ணின் கணவர் நிகேஷ் திருமணத்துக்குப் பின் அவருடன் விலகியே இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மனைவியை உதாசீனப்படுத்தியவர் அவரை அடியோடு வெறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியை வீட்டை விட்டு அடித்து துரத்த திட்டமிட்டுள்ளார்.
அப்போது தான் தனது மனைவியை நண்பர்கள் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அதற்காக நண்பர்களிடம் 50,000 ரூபாய் பேரம் பேசி வாங்கியுள்ளார்.
தொடர்ந்து நிகேஷின் நண்பர்கள் அவரின் மனைவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் அவரை ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர். அங்கு இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
10 நாட்களுக்கு மேலாக 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன், அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டனர்.
மனைவி காணவில்லை எனக் கூறி நாடகமாடிய கணவன் நிகேஷை கைது செய்த பொலிஸார், பெண்ணை கடத்தி சித்ரவதை செய்த மேலும் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
கட்டிய மனைவியை 50,000 ரூபாய்க்கு கணவனே தனது நண்பர்களிடம் விற்பனை செய்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.