இலங்கை கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக, ஜப்பான் மேலதிகமாக சுமார் 2.1 பில்லியன் ரூபா (1 பில்லியன் ஜப்பானிய யென்) நிதியுதவியை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அறிவிப்பின்படி, 2026 நிதியாண்டுக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் (OSA) கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் இலங்கை கடற்படைக்காக இறுக்கமான அடிப்பாகத்தைக் கொண்ட ஊதப்பட்ட படகுகள் (Rigid Hull Inflatable Boats – RHIBs) கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இந்தப் படகுகள் கடற்படையின் கடல்சார் கண்காணிப்பு, கண்காணிப்புப் பணிகள் மற்றும் அனர்த்தங்களின்போது அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திறன்களை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் நவம்பர் 10ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு, அதற்கான ஆவணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா மற்றும் திறைசேரி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இந்த ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற விமானப்படை மார்ஷலுமான சம்பத் துயகொந்தாவும் கலந்துகொண்டார்.
2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட OSA திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் வழங்கும் இரண்டாவது பாதுகாப்பு உதவித் திட்டம் இதுவென தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் பங்காளி நாடுகளின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு இணக்கம் காணப்பட்ட முதலாவது திட்டத்தின் கீழ், இலங்கை கடற்படைக்காக ஆளில்லா விமானங்களை (UAVs) கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடல்சார் கண்காணிப்பு மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மேலும், இந்த உதவிகள் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியம் (Free and Open Indo-Pacific – FOIP) தொடர்பான ஜப்பானின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது. பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் மீண்டெழும் திறன்களை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள இரு தீவு நாடுகளான ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்குப் பங்களிப்பதுடன், இலங்கையின் சுயாதீன பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கத் திறன்களை வலுப்படுத்துவதற்குத் தொடர்ந்து ஆதரவளிக்க ஜப்பான் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.










