அம்பாறை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாத மூன்று ஆண்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்கு இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மருத்துவ சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மூவரும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலரின் சடலங்கள் பல மாதங்களாக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் எந்தவொரு உறவினரும் முன்வந்து அவற்றை அடையாளம் காணவோ அல்லது பொறுப்பேற்கவோ இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முதலாவது நபர்:
யூ. டி. பெர்னாண்டோ (U. D. Fernando) என்ற பெயரை வழங்கியுள்ள குறித்த நபர், தனது வதிவிட முகவரியை வழங்கவில்லை. இவர் 2026 மார்ச் 29ஆம் திகதி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சுமார் 52 வயதுடைய இவர், 5 அடி 3 அங்குல உயரமும், கட்டான உடலமைப்பும், சற்று நீளமான தலைமுடியும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நபர்:
விஜேரத்ன (Wijeratne) என்ற பெயரை வழங்கியுள்ள இந்த நபரும் தனது வதிவிட முகவரியை வழங்கவில்லை. இவர் 2026 ஜூன் 24ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் ஜூன் 25ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சுமார் 70 வயதுடைய இவர், 5 அடி 1 அங்குல உயரமும், கருமையான நிறமும், மெலிந்த உடலமைப்பும், சற்று வளர்ந்த தலைமுடியும் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது நபர்:
இதுவரை அடையாளம் காணப்படாத இந்த நபர், 2026 ஆகஸ்ட் 10ஆம் திகதி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒக்டோபர் 24ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சுமார் 70 வயதுடைய இவர், 5 அடி உயரமும், கருமையான நிறமும், மெலிந்த உடலமைப்பும், குறுகிய தலைமுடியும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரையும் அடையாளம் காண்பதற்கோ அல்லது அவர்களது உறவினர்களைக் கண்டறிவதற்கோ உதவக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள், அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகரை 071-8591148 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது அம்பாறை பொலிஸ் நிலையத்தை 063-2222222 என்ற இலக்கத்திலோ தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவும் வகையில், இந்தத் தகவல்களைப் பொதுமக்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பரவலாகப் பகிர்ந்து கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.










