சம்மாந்துறை பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றல் சேவையை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில், 2026ஆம் ஆண்டுக்கான PSDG நிதி மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட உழவு இயந்திரம், திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், குறித்த உழவு இயந்திரத்தை திண்மக்கழிவு அகற்றும் பணிக்காக சாரதியிடம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ. வினோகாந்த், பிரதேச சபை உறுப்பினர்களான வீ. ஜெயசந்திரன், ஏ.எல்.எம். ஜிப்ரி, எம்.ஆர். ஆஷிக் அஹம்மட், ஏ.எச்.எம். காலித், எம்.ஐ.எம். றிஸ்விக்கான், வை.எல். பஸீர், எஸ்.எல்.எம். பஹ்மி, ஏ.எம்.எம். அப்னான், ஏ.சீ.எம். நயீம், ஐ.எம். ஹாதிக், ஏ. சதானந்தா, எஸ்.எல்.ஏ. நஸார், எம்.எல்.ஏ. கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீத் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
சுமார் 132 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட சம்மாந்துறை பிரதேசம், 51 கிராம சேவகர் பிரிவுகளையும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தில் சுமார் 33 வருடங்களுக்கும் மேலான பழைமையான உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே இதுவரை திண்மக்கழிவு அகற்றல் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய உழவு இயந்திரத்தின் பயன்பாட்டின் மூலம் திண்மக்கழிவு அகற்றல் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.










