கையிருப்பில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இருந்தும் அவற்றை விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட தலா 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையமாக இயங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தில் எரிவாயு சிலிண்டர்கள் இருந்தும் விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, ஒக்டோபர் 29ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, வாடிக்கையாளர் போன்று சென்ற அதிகாரி ஒருவர் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றைக் கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார். எனினும், சிலிண்டர்கள் கையிருப்பில் இல்லை என வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விற்பனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்து சிலிண்டர்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், வர்த்தகருக்கு எதிராக கண்டி நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைகளின் பின்னர் வர்த்தகருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட 28 எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 16(a) பிரிவின் கீழ், விற்பனைக்காகப் பொருட்கள் கையிருப்பில் இருந்தும் அவை இல்லை எனப் பொய்யாகத் தெரிவிப்பது வர்த்தகர்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.
பொருட்களைப் பதுக்குதல், நுகர்வோரைத் தவறாக வழிநடத்துதல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.










