நாட்டில் தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
PickMe Food மற்றும் Uber Eats போன்ற உணவு விநியோக சேவைகளை அனைவராலும் பயன்படுத்த முடியாது என்றும், பல குடும்பங்கள் வீட்டில் உணவு சமைப்பதற்காக எரிவாயுவையே நம்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா, குறிப்பாக லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு தொடர்ந்தும் கிடைக்காமை தொடர்பில் அரசாங்கம் தீர்வு காணத் தவறியுள்ளதாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அனைவராலும் PickMe Food அல்லது Uber Eats மூலம் உணவு வாங்க முடியாது. பல குடும்பங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை ஏற்பாடு செய்வதற்கே சிரமப்படுகின்றன. அவர்கள் வீட்டில் உணவு சமைப்பதையே நம்பியுள்ளனர். ஆனால் எரிவாயு இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மாவு, பாண் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த நிலைமை குடும்பங்களின் பொருளாதார சுமையை மேலும் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது சொந்த அனுபவத்தையும் குறிப்பிட்ட ஹர்ஷ டி சில்வா, லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தன்னிடம் லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர் இருந்ததால் சமாளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானிய எரிசக்தி பொருட்கள் தொடர்பான பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நிறுவனத்தின் டுபாயைத் தளமாகக் கொண்ட துணை நிறுவனத்திற்கு அமெரிக்கத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சாதாரண குடும்பங்களைப் பாதிக்கும் லாஃப்ஸ் எரிவாயு விநியோகப் பிரச்சினைக்கு அரசாங்கத்தால் ஏன் தீர்வு காண முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் பிரச்சினை ஒப்பீட்டளவில் எளிதில் தீர்க்கக்கூடிய ஒன்றாக இருந்தபோதிலும், அரசாங்கம் அதனைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியையும் விமர்சித்த அவர், இதேபோன்ற நிலைமை எதிர்க்கட்சிக் காலத்தில் ஏற்பட்டிருந்தால், அந்தக் கட்சி போராட்டங்களை ஏற்பாடு செய்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விநியோகப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அரசாங்கத்தையும் பொறுப்பான அமைச்சரையும் வலியுறுத்திய ஹர்ஷ டி சில்வா, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்கள் அன்றாட உணவைத் தயாரிப்பதிலும் மேலும் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.










