வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தை சமர்ப்பிப்பது எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத பெருமளவான மக்கள் இன்று (02) திங்கட்கிழமை உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
இதனால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமையகத்திலும் பிராந்திய அலுவலகங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இணையவழியில் ஒரே நேரத்தில் பெருமளவானோர் விண்ணப்பித்தமையால், திணைக்களத்தின் இணையத்தளத்திலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கொன்றைத் திறத்தல், வாகனத்தைப் பதிவு செய்தல், வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் மற்றும் வியாபாரத்தைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு நவம்பர் 1ஆம் திகதி முதல் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பெருமளவானோர் வருகை தருவது குறித்து கருத்து தெரிவித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான நந்தன குமார, தேவைக்கேற்ப மாத்திரம் திணைக்கள அலுவலகங்களுக்கு வருகை தருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் சட்டரீதியான தேவையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்காக TIN இலக்கம் அவசியமானவர்கள் மாத்திரம் தற்போது உரிய பிரிவுகளுக்குச் செல்லுமாறும், ஏனையோருக்கு TIN இலக்கங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதால் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு TIN சான்றிதழின் பிரதியை சமர்ப்பிக்க முடியும் என்பதால், சான்றிதழை பாதுகாப்பாக வைத்திருந்து அதன் பிரதியை பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.










