இந்தியா, 2027ஆம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் (Pravasi Bharatiya Divas) குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியை அறிவித்துள்ளதுடன், ‘இந்தியா எனக்கு எதைக் குறிக்கிறது?’ (What India means to me) என்ற தொனிப்பொருளில் குறும்படம் ஒன்றை உருவாக்கி, இந்தியாவுடனான தங்களின் தொடர்பைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
#IndiaInMe என்ற ஹேஷ்டேக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் இப்போட்டி 2026 நவம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 20ஆம் திகதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியினர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (NRI), வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை கொண்டவர்கள் (OCI), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIO) மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட அனைவரும் இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், Apple App Store மற்றும் Google Play Store ஆகியவற்றில் கிடைக்கும் ‘BharatVerse’ செயலியில் பதிவு செய்து, #IndiaInMe Reel Contest என்பதைத் தெரிவுசெய்ய வேண்டும்.
அதன்பின்னர், இந்தியா தங்களுக்கு எதைக் குறிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில், அதிகபட்சம் 30 விநாடிகள் கொண்ட செங்குத்து வடிவிலான Instagram குறும்படம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
குறித்த குறும்படத்தை #IndiaInMe என்ற ஹேஷ்டேக்குடன் Instagram இல் பதிவிடுவதுடன், @bharatversequiz என்ற கணக்கையும் இணை ஆக்குநராக (Collaborator) சேர்க்க வேண்டும். அந்தக் கணக்கிலிருந்து அனுப்பப்படும் இணைப்பு அழைப்பை ஏற்றுக்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படும்.
இப்போட்டியில் பங்கேற்பதற்கு எவ்விதக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்பதுடன், நுழைவுக் கட்டணம், கொள்வனவு அல்லது அதிர்ஷ்டக் குலுக்கல் எதுவும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.










