இலங்கை சுங்கத் திணைக்களம் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, பேலியகொடை சுங்கக் களஞ்சியத்தில் இருந்து சுமார் 181.93 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
18.193 கிலோகிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள், மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட மூன்று பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான குறித்த பொதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றைப் பெற்றுக்கொள்ள வருபவர்களைக் கைது செய்யும் நோக்கில் தடுத்து வைக்கப்பட்டன.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதிகளைப் பெற்றுக்கொள்ள எவரும் முன்வராத நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக (PNB) அதிகாரிகள் முன்னிலையில் அவை திறந்து சோதனையிடப்பட்டன.
இதனையடுத்து, சுங்கத் திணைக்களத்தின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (Image AI Generated)










