இலங்கையின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை, அங்குணகொலபெலஸ்ஸ, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, கட்டுவன, லுணுகம்வெஹெர, ஓகேவெல, சூரியவெவ, தங்காலை மற்றும் வீரகெட்டிய ஆகிய பிரதேசங்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும், மழை மற்றும் நீர் தேங்குவதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளிலும் இடையூறுகள் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் மண்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் மண் அரிப்பு போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில பகுதிகளுக்கான போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிடும் வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டுகொள்வதுடன், தேவை ஏற்படின் வெளியேறுவதற்குத் தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தத்தமது பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










