இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளான மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து அவசர மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கடற்படையினரின் தகவலின்படி, ‘Cheshan Putha 02’ என்ற பலநாள் மீன்பிடிப் படகில் பயணித்த ஏழு மீனவர்களில் மூவர் திடீரென உடல்நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த மீன்பிடிப் படகு கடந்த நவம்பர் 06ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஏழு மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளது. இந்நிலையில், திருகோணமலை கடற்கரையிலிருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, மீனவர்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் (MRCC) உதவி கோரியுள்ளது.
இதற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் P 450 என்ற அதிவேகத் தாக்குதல் படகை இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளது.
இதன்போது, நோய்வாய்ப்பட்ட மூன்று மீனவர்களும் குறித்த படகுக்கு மாற்றப்பட்டு, கடற்படையினரால் முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
பின்னர், மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அவசர நிலைமைகளுக்குப் பதிலளிப்பதற்காகத் தமது படையினர் தொடர்ச்சியான தயார் நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.










