மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்கள் இருவர் உள்ளடங்கலாக மூவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் வைத்து ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்திருந்தது.
இந்த ஐந்து முக்கியக் கொலைகளுடன் தொடர்புடைய பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் உள்ளடங்கலாக நால்வருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வழக்குத் தாக்கல் செய்து, அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தித் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று திறந்த மன்றில் பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பிள்ளையான் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு ஒன்றுக்கு ஆஜராகியுள்ளதால், அவரைக் காணொளி ஊடாக ஆஜர்படுத்த முடியவில்லை எனச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் எழுத்துமூல ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.
அத்துடன், இச்சம்பவங்கள் தொடர்பான சாட்சியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து, பிள்ளையான் உள்ளடங்கலாக மூவரையும் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், லண்டனில் உள்ள சந்தேக நபரான ‘பொலிஸ் பாய்ஸ்’ என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸுக்குத் தொடர்ந்து திறந்த பிடியாணை பிறப்பித்தார்.
இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபரான லண்டனில் உள்ள மொஹமட் பாய்ஸைக் கைது செய்வதற்கான பிடியாணை, நீதிமன்ற அனுமதியைப் பெற்றுச் சர்வதேசப் பொலிஸாரிடம் (Interpol) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










