உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) தொடர்பில், விரிவான பொதுமக்கள் ஆலோசனைகள் முன்னெடுக்கப்படும் வரை இறுதி முடிவொன்றை எடுக்கக்கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அமளியான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், கடந்த நவம்பர் 7ஆம் திகதி பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்த போதிலும், உத்தேச சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக ஆளுகை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இன்று பிற்பகல் கூடவுள்ளதாகத் தெரிவித்தார்.
குறித்த குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் தானும் இணைந்து, சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதில், குழுவின் கலந்துரையாடல்களைத் தொடர்வதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், எனினும் இறுதி முடிவொன்றை எடுப்பதைத் தவிர்க்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுடனான ஆலோசனைகளில் பங்கேற்பதற்கு சிவில் சமூக அமைப்புகளின் பெருமளவிலான பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய சாணக்கியன் இராசமாணிக்கம், குழு இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் அவர்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உத்தேச சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஆராய்ந்துள்ளதாகத் தெரிவித்தார். எனினும், பொதுமக்களுடனான ஆலோசனைகளை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றவர்கள் தாமாகவே பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறிய அமைச்சர், மேலதிகக் கவலைகள் அல்லது கருத்துகள் இருப்பின் அவற்றை துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் முன்வைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதி சபாநாயகர் தீர்மானம் வழங்குவதற்குப் பதிலாக, துறைசார் குழுவே முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது தலையிட்ட பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விவகாரம் குழு மட்டத்தில் ஆராயப்பட வேண்டியதொன்று எனவும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் மேலதிக விவாதம் நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
எனினும், தனது எதிர்ப்பைத் தொடர்ந்து முன்வைத்த சாணக்கியன் இராசமாணிக்கம், 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (PTA) சுட்டிக்காட்டி, அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பில் நாடாளுமன்றம் மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எச்சரித்தார்.
சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதனை மீளாய்வு செய்வதற்கான பொறிமுறை நாடாளுமன்றத்தில் இல்லை எனவும், எனவே சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரான கட்டத்திலேயே விரிவான ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் எனவும் அவர் வாதிட்டார்.
இதனையடுத்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது ஆசனங்களிலிருந்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் சபையில் அமளி ஏற்பட்டது.
இதன்போது தலையிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இந்த விவகாரம் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நீதி அமைச்சரின் நிலைப்பாட்டை நிராகரித்தார்.
குறித்த குழு நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்ட ஒன்று என்பதால், இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என அவர் தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மீறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகள் தொடர்ந்தபோதிலும், சாணக்கியன் இராசமாணிக்கத்தின் கவலைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விவகாரம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.










