தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 418 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் லுவான்-ட்ரே பிரட்டோரியஸ் 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 251 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சிம்பாப்வே அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் சேன் வில்லியம்ஸ் 137 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 167 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 369 ஓட்டங்களை பெற்றுக்கொள்ளஇ சிம்பாப்வே அணிக்கு 537 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தநிலையில் வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 208 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதன்படி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.