கொழும்பு பங்குச்சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை கணிசமான அளவு வெளிநாட்டுப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, 3.03 பில்லியன் ரூபா அளவிலான பாரிய நிகர வெளிநாட்டு மூலதனம் சந்தையை விட்டு வெளியேறியுள்ளது.
அன்றைய தினம் பங்குச்சந்தையின் மொத்த வர்த்தகப் புரள்வு 4.92 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருந்த நிலையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் இதில் தீவிரமாகப் பங்களிப்பு செய்துள்ளனர்.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் கொள்வனவுகள் 4.87 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்த அதேவேளை, அவர்களின் விற்பனைகள் 1.84 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டன.
இருப்பினும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கொள்வனவுகள் வெறும் 48 மில்லியன் ரூபா என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது.
அதற்குச் சார்பாக 3.08 பில்லியன் ரூபா என்ற பாரிய அளவிலான வெளிநாட்டுப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலைமை காரணமாகவே அன்றைய தினத்தின் ஒட்டுமொத்த சந்தை நிலவரமும் பாரிய நிகர வெளிநாட்டு மூலதன வெளியேற்றமாகப் பதிவாகியிருந்தது.
நேற்று சொப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்னணி வெளிநாட்டுப் பங்குதாரர் ஒருவர், தமக்குச் சொந்தமான பங்குகளின் ஒரு பகுதியை விற்பனை செய்தமையே இந்த மூலதன வெளியேற்றத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.