வெப்பநிலை அதிகரிப்பால் ஐரோப்பா கண்டத்தில் காட்டுத்தீ

2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற (UNFCCC) மாநாட்டின் COP27 எனும் கட்சிகளின் கூட்டம் 6 நவம்பர் முதல் 18 நவம்பர் 2022 வரை எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றத்தால் நாடுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் மற்றும் அதை சரிசெய்யும் வழிகள் இதில் கலந்துரையாடப்படும் .

மாநாட்டில் 2022 ஆம் ஆண்டில் வெப்பமான காலநிலை காரணமாக இதுவரை ஐரோப்பாவில் குறைந்தது 15,000 பேர் இறந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது. அதோடு ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன.

ஜூன்-ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்கள், பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஐரோப்பாவில் மிகவும் வெப்பமானதாக இருந்துள்ளது. அதோடு ஐரோப்பிய கண்டம் முழுதும் பெரும் வறட்சியை சந்தித்துள்ளது.

இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட நாட்டின் தரவுகளின் அடிப்படையில், 2022 இல் வெப்பம் காரணமாக குறைந்தது 15,000 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று WHO இன் ஐரோப்பாவின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஸ்பெயினில் ஏறக்குறைய 4,000 இறப்புகள், போர்ச்சுகலில் 1,000 க்கும் அதிகமானோர், ஐக்கிய ராஜ்யத்தில் 3,200 க்கும் அதிகமானோர் மற்றும் ஜெர்மனியில் சுமார் 4,500 இறப்புகள் கோடையின் வெப்பத்தால் நடந்ததாக சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரலாறு காணாத வெப்பநிலை அதிகரிப்பால் ஐரோப்பா கண்டத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. அதோடு வெப்பம் அதிகரிப்பதால் மின் பயன்பாடு என்பது சராசரியை விட பன்மடங்கு பெருகியது.

ஜூன் மற்றும் ஜூலை இடையேயான வெப்ப அலைகள் காரணமாக, பிரிட்டனில் முதல் முறையாக 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையைக் கண்டது. இந்த வெப்பநிலையில் தாக்கத்தால் ஐரோப்பாவில் 24,000 அதிகப்படியான இறப்புகளைக் கண்டது.

நாள்பட்ட இதய நோய், சுவாச பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர வெப்பநிலை ஆபத்தை ஏற்படுத்தும். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம்.

காலநிலை மாற்றம், வெப்ப சலனம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த தசாப்தங்களில் அதிகரிக்கும் வெப்ப அலைகள் மற்றும் பிற தீவிர வானிலை காரணமாக அதிக நோய்கள் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று WHO கூறியது.