இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாஹர் மாவட்டம் குர்ஜா நகர் பகுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஜீது சைனி என்ற இளைஞரின் பிறந்தநாள் விழா உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் நடைபெற்றது.
இதன்போது, அவரது நண்பர்களான அமர்தீப் சைனி, மனீஷ் சைனி மற்றும் ஆகாஷ் சைனி ஆகியோர் விளையாட்டாக ஜீதுவின் முகத்தில் கேக் பூசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜீது சைனிக்கும், நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகராறுக்குப் பின்னர் அங்கிருந்து சென்ற ஜீது சைனி, சிறிது நேரத்தில் சில நபர்களுடன் மீண்டும் வந்து நண்பர்களை நோக்கிச் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மூன்று நண்பர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த பொலிஸார், தடயங்களைச் சேகரித்து வருவதுடன், தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது ஒரு திட்டமிட்ட கொலை என்று உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார், என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.